நீலகிரி மாவட்டத்தில் ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், இந்தாண்டு கரோனா ஊரடங்கால் கடந்த ஆறு மாதங்களாக மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர். ஊரடங்கால் மே மாதத்தில் நடைபெற இருந்த மலர் கண்காட்சியும் ரத்து செய்யபட்டது. இந்த நிலையில் கரோனா ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அளித்து வருகிறது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களும் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உதகையில் இரண்டாவது சீசன் காலம் தொடங்கியதால், தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மலர் கண்காட்சியில் வைக்க 15 ஆயிரம் தொட்டிகளை தயார்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.