நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வசித்துவரும் நாகராஜ் (71) என்பவர் யானை தந்தம், கொம்புகள் மற்றும் எலும்புகளால் தயாரிக்கப்பட்ட கலை பொருள்களை வைத்திருப்பதாக நீலகிரி மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நாகராஜின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் காட்டு யானை முடிகள், முடியால் செய்த கை வளையல்கள், தந்தத்தால் செய்யப்பட்ட கலை பொருள்கள், சிறிய சிலைகள் உள்பட 29 வகையான பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணன் இதில் சில பொருள்களை நாகராஜ் வெளியில் விற்பனை செய்துள்ளதும், சிலவற்றைப் பணம் கொடுத்து வாங்கியும் உள்ளார். இதனையடுத்து நாகராஜை கைது செய்த வனத்துறையினர் கலை பொருள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் இவருக்கு, கேரளா, கர்நாடகா, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்பிருந்தது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீலகிரியில் ஊதியம் வழங்கக்கோரி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்