நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நாடுகாணி, பாட்டவயல், எருமாடு, சோலாடி, நம்பியார்குன்னு, கக்க நல்லா, தாளூர் போன்றஏழு சோதனை சாவடிகள் உள்ளன. இந்த வழியாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்குவருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவிவருகிறது. இதனால் அந்த நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க இன்று முதல் ஏழு எல்லை சோதனை சாவடிக்குள் வரும் கேரளா பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு சுகாதாரத் துறையினர் ஏழு குழுக்களை அமைத்துள்ளனர்.
அந்தக் குழுக்கள் அவ்வழியாக வரும் ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி அவர்கள் ஏதேனும் பழங்கள் கொண்டு வருகின்றனரா? அல்லது காய்ச்சல் அறிகுறி ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்து, அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிபா வைரஸ் எவ்வாறு பரவும் என்பது பற்றி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை ஓரங்களில் வைத்துள்ள பழங்களை ஆய்வு செய்த அலுவலர்கள் சந்தேகத்தின் பேரில் இருந்த வனத்தில் விளையக்கூடிய மாம்பழம், கொய்யா, பிளம்ஸ் போன்ற பழங்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, உயர் அலுவலர்கள் ஈடுபட்டனர்.
நிபா வைரஸ் குறித்து சுற்றுலா பயணிகளிடம் ஆய்வு