ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை - நீலகிரி ஆட்சியர் அம்ரீத் விளக்கம்! நீலகிரி: முதுமலைப் புலிகள் காப்பகத்தில் உள்ள காட்டுப்பன்றிகளுக்கு பரவி வரும் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் குறித்து பொது மக்கள் கவலைப்பட வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து மடிந்தன. அதேபோல் கடந்த வாரத்தில் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.
உயிரிழந்த பன்றிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கபட்டு ஆய்வுக்குட்படுத்தியதில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் காரணமாக காட்டுப்பன்றிகள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "முதுமலைப் புலிகள் காப்பகத்தில் காட்டுப்பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்க பன்றிக்காய்ச்சல் என்று தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சபடத் தேவையில்லை.
மேலும் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி பண்ணைகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில் அந்த மாவட்ட ஆட்சியர்களுடன் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை காணொலி காட்சி முலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளது’ என மாவட்ட ஆட்சியர் அம்ரீத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!