நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று கன மழை கொட்டியது. அதிகபட்சமாக உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 15.3 செ.மீ மழை பதிவானது.
அதேபோல கூடலூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. உதகை அருகே பாலாடை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின.
இதனிடையே இன்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உதகை, சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் மழை குறைவாகவே பெய்து வருகிறது. ஆனால், அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து, முக்குருத்தி, இத்தலாரு உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து கொட்டி வருகிறது.
மின்சாரம் துண்டிப்பு
இதனால் அவலாஞ்சி வனப்பகுதியில் ஆறுகளில் நீர்ப்பெருக்கெடுத்து ஓடுகிறது. சிறு சிறு அருவிகளிலும், ஓடைகளிலும் நீர் கொட்டி வருகிறது.
இதனால் அவலாஞ்சி எமரால்டு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே அவலாஞ்சி, எமரால்டு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், நேற்று காலை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சீரமைத்தாலும் பலத்த காற்று, மழையால் மீண்டும் துண்டிக்கப்படுவதால் மின்வாரிய ஊழியர்கள் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் ஏராளமான கிராம மக்கள் மின்சாரம் இன்றி 24 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் தவித்து வருகின்றனர். கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூடலூரில் தொடர் மழை: மக்கள் அவதி