தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலிந்துவரும் யூகலிப்டஸ் தைலத் தொழில்! - நீலகிரி தைலம்

நீலகிரி: யூகலிப்டஸ் தைல உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தைலம் தயாரிப்போர் தொடர் பிரச்னைகளால் பரிதவித்துவருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

யூகலிப்டஸ் தைலம்

By

Published : Oct 11, 2019, 11:57 PM IST

Updated : Oct 16, 2019, 4:00 PM IST

நீலகிரியில் தயாரிக்கப்படும் 'யூகலிப்டஸ்' தைலத்துக்கு நல்ல கிராக்கி இருந்தும், ஆட்கள் பற்றாக்குறையால் இத்தொழில் நலிவடைந்து வருகிறது.

'நீலகிரி தைலம்' எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெய் நாடு முழுவதும் பிரபலம். ஆங்கிலேயர் ஆட்சியில், 1848இல் ஆஸ்திரேலியாவில் இருந்து யூகலிப்டஸ் நாற்றுகள் கொண்டு வரப்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் வளர்க்கப்பட்டன. இதில் 32 வகை நாற்றுகள், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மட்டும் வளர்க்கப்பட்டன.

இதன் இலைகளில் இருந்து தைலம், திரவம் தயாரிக்கப்பட்டதால், அதற்கு நீலகிரி தைலம் என்ற பெயர் வந்தது. யூகலிப்டஸ் எண்ணெய் தயாரிப்பில், தைல கொட்டகை முக்கியத்துவம் பெறுகிறது. இவை, யூகலிப்டஸ் மரங்களில் பறிக்கப்படும் இலைகள், உதிர்ந்து கிடக்கும் இலைகள் என இரு வகை இலைகள் மூலம் தைலம் காய்ச்சப்படுகிறது.

சுமார் 400 கிலோ இலைகளை காய்ச்சும் கொள்ளளவு கொண்ட டிரம்கள், அடுப்பு, குழாய்கள் என, அனைத்து வித உட்கட்டமைப்புகளை கொண்ட தைலம் தயாரிப்பு கொட்டகை, வீட்டைப் போல் தோற்றம் கொண்டது. இங்கு யூகலிப்டஸ் தைலம் குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியல் வெப்ப நிலையில் தயாரிக்கப்படுகிறது.

கடந்த 65 ஆண்டுகளாக நீலகிரி தைலம் தயாரித்து வரும் ராஜேந்திரன் கூறுகையில், "இலைகளை டிரம்களில் போட்டு, காய்ந்த இலை, பச்சை இலைக்கேற்ப தேவையான அளவு நீரை ஊற்றி வேக வைப்போம். வெளியேறும் ஆவி, டிரம்களில் இணைக்கப்பட்டுள்ள குழாய் வழியே கீழ் பகுதியில் உள்ள தொட்டியில் நீராக கொட்டும். அதில், அடர்த்தி குறைவான தைலம் மிதக்கும். நீரானது, கீழ் பகுதிக்கு சென்று வெளியேறும். எஞ்சிய தைலத்தை எடுத்து வடிகட்டி, சுத்திகரிப்பு செய்து விற்பனைக்கு தயார் செய்வோம். இதில், மூன்று விதமான பணிகளை நுட்பமாக செய்தால்தான், தரமான தைலம் கிடைக்கும்,'' என்றார்.

நலிந்துவரும் யூகலிப்டஸ் தைலத் தொழில்!

முன்பு, நீலகிரியில் 1500க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் தைல உற்பத்தி கொட்டகைகள் இருந்தன. தொழிலாளர் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் உற்பத்தி குறைந்த வருகிறது.

நீலகிரி வடக்கு, தெற்கு வனக்கோட்டங்களில் 800 சதுர கி.மீ. அளவுக்கு வனங்கள் உள்ளன. இதில், சுமார் 150 சதுர கி.மீ. அளவுக்கு யூகலிப்டஸ் மரங்களும், நூறு சதுர கி.மீ. அளவுக்கு சவுக்கு மரங்களும், மீதமுள்ளவை சோலை, புல்வெளிகளாகவும் உள்ளன.

மேலும் நிலத்தடி நீரை உறிஞ்சும் யூகலிப்டஸ் மரங்களில் பெரிய மரம் சராசரியாக நாளொன்றுக்கு 30 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். எனவே, அவற்றை குறைக்கும் நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தைல உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் தரமான நீலகிரி தைலத்தை தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: அச்சுறுத்தும் புலி... மக்கள் கிலி...! - உயிருடன் பிடிக்கும் முனைப்பில் வனத் துறை!

Last Updated : Oct 16, 2019, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details