ஒரு நாளுக்கு 50 சுற்றுலா இ-பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்
நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவைக் காண ஒரு மணி நேரத்தில் 200 பேர் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இதில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்டவைகள் 172 நாட்களுக்குப் பிறகு இன்று (செப்.9) மீண்டும் திறக்கப்பட்டன.
முதற்கட்டமாக தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் உள்ள பூங்காக்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ள நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசங்கள் அணிய வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் பூங்காகளினுள் அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக தனி மனித இடைவெளியைப் பின்பற்றும் விதமாக தாவரவியல் பூங்காவைக் காண ஒரு மணி நேரத்திற்கு 200 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள் பூங்காவிலிருந்து வெளியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். நீலகிரியை சுற்றிப் பார்க்க அனுமதி கோரி தினந்தோறும் விண்ணிப்பிக்கப்படும் முதல் 50 இ-பாஸ்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கபடும்” எனத் தெரிவித்தார்.