நீலகிரியில் சுமார் ஒரு லட்சம் பேர் சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் 9 மாதங்கள் வருவாய் இன்றி தவித்தனர். அந்த பாதிப்பிலிருந்து சுற்றுலாத் தொழிலாளர்கள் மீண்டு வராத நிலையில், கரோனா 2 ஆவது அலை காரணமாக கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடபட்டுள்ளன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதகையில் சுற்றுலாத் தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வாழ்வாதாரமின்றி தவிக்கும் நடைபாதை வியாபாரிகளுக்கு முதற்கட்டமாக காய்கறிகள், மளிகை பொருள்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரணமாக வழங்கபட்டது. இந்நிலையில், இன்று (ஏப்.29) மாவட்ட நிர்வாகம், தனியார் அமைப்போடு இணைந்து சுற்றுலா வழிகாட்டிகளுக்கு நிவாரண பொருள்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து இன்னசென்ட் திவ்யா கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போது வரை கரோனா சிகிச்சையில் 400 பேர் உள்ளனர். பரிசோதனை எண்ணிக்கை 1300 ஆக அதிரிக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடக சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலத்திலிருந்து வருபவர்களிடம் இ-பாஸ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
நீலகிர மாவட்ட அரசு ஊழியர்கள் வெளி மாவட்டம் செல்லத் தடை! வெளி மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருவதால் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் வெளி மாவட்டத்திற்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் குழந்தை திருமணங்கள் குறித்த புகார் வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனறு தெரிவித்தார்.
இதையும் படிங்க:'பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்'