வாசல்:
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இது உதகமண்டலம், குன்னூர் ஆகிய பொதுத் தொகுதிகளையும், கூடலூர் தனி தொகுதியையும் கொண்டுள்ளது.
தொகுதிகள் வலம்:
உதக மண்டலம்: மலைமாவட்டமான நீலகிரியின் தலைநகரில் அமைந்துள்ளது உதகை தொகுதி. நாட்டின் ஒரே மலை ரயில், பூங்காக்கள், அணைகள், பள்ளத்தாக்குகள் என சுற்றுலாத் தலங்கள் பலவற்றைக் கொண்டது இத்தொகுதி.
முக்கிய தொழில், சுற்றுலா, தேயிலை சாகுபடி, மலை காய்கறிகள் விவசாயம்.
தேயிலைக்கு இதுவரை சரியான விலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றை விற்பனை செய்ய மேட்டுப்பாளையம் சந்தைக்கே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
இதனால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், இதனைத் தவிர்க்க உதகையில் காய்கறி விற்பனை மையம் அமைக்க வேண்டும் எனக் காய்கறி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கான வாகன நிறுத்த வசதிகள் செய்து தரப்படாது பெரும் குறையாகவே நீடிக்கிறது.
குன்னூர்: சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் பார்க், டால்பின் நோஸ் போன்ற முக்கிய சுற்றாலத் தலங்களையும், வெலிங்டன் பாசறை நகரத்தையும் கொண்டது குன்னூர் தொகுதி. முக்கியத் தொழில் தேயிலை சாகுபடி; அடுத்தப்படியாக கொய்மலர் விவசாயம்.
ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இத்தொகுதியின் தீர்க்கப்படாதப் பிரச்னையாக இருந்து வருவது வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதிகள் இல்லாமல் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இங்குள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், பேருந்து நிலையம் செல்லும் வழியிலுள்ள ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற இத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கூடலூர் (தனி): கூடலூர், பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கிய தொகுதி இது. தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. மாவட்டத்தின் மற்ற இரு தொகுதிகளைப் போல சுற்றுலாவுக்கு வாய்ப்பில்லாததால், விவசாயமே பிரதானமான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.