நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் (மார்ச் 21) கரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று (மார்ச் 22) ஒரேநாளில் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, உதகையில் உள்ள காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் இன்று (மார்ச் 23) முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. இதனிடையே, உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா," நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்களுடன் அதிக தொடர்பில் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தபட்டு வருகிறது.
மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாக இணையளத்தில் பதிவு (இ-ரெஜிஸ்டேசன்) செய்ய வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணிக்க 70 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.