நீலகிரி: உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் லட்சக்கணக்கில் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலா வரும் பெரும்பாலானவர்களுக்கு, மலை ரயிலில் பயணம் செய்வதில் ஆர்வம் அதிகமாக இருப்பது உண்டு. ஆனால் டிக்கெட் கிடைக்காமல் போவதால், பல சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். இதனையடுத்து சீசனின்போது சிறப்பு மலை ரயிலை இயக்க சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, நீலகிரி சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கி உள்ளது.
இதன் அடிப்படையில், குன்னூரில் இருந்து கேத்தி, லவ்டேல் வழியாக உதகைக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம் தொடங்கியது. காலை 8.10 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, உதகைக்கு 9.40 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு மலை ரயில், 5 பெட்டிகள் உடன் இயக்கப்படுகிறது. அதேபோல் உதகையில் இருந்து மாலை 4.45 மணிக்கு மலை ரயில் புறப்பட்டு, 5.55 மணிக்கு குன்னூருக்கு வந்து சேரும். இதில் முதல் வகுப்பு கட்டணமாக 630 ரூபாயும், 2ஆம் வகுப்பு கட்டணமாக 465 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது.
இது தவிர, உதகையில் இருந்து கேத்திக்கு காலை 9.45, 11.30 மற்றும் பிற்பகல் 3 மணிக்கும், கேத்தியில் இருந்து உதகைக்கு காலை 10.10, பிற்பகல் 12.10 மற்றும் மாலை 3.30 மணிக்கும் சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, ஜூன் 26ஆம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில், காலை 9.10 மணிக்கு புறப்பட்டு, உதகைக்கு 2.25 மணிக்கு வந்தடையும்.