உதகை:நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் ஊட்டி மலை ரயில், மிக நீண்ட வரலாறு கொண்டது. 1854ஆம் ஆண்டு ஊட்டி மலையில் ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. மலைப்பகுதி மிகவும் கரடு முரடாக இருந்ததால் இந்தப் பணி தாமதடைந்து, 1891ஆம் ஆண்டு தான் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. முதலில், 1899ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 1908ஆம் ஆண்டு உதகமண்டலம் வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது.
அந்த ஆண்டு முதல் மலை ரயில் போக்குவரத்து தொய்வின்றி தொடங்கி நடந்து வருகிறது. உலக அளவில் இதுபோன்ற மலை ரயில் சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. கடந்த 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, நீலகிரி மலை ரயிலை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது. யுனெஸ்கோவின் புராதன அந்தஸ்து பெற்றது என்று, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் ஊட்டி மலை ரயிலுக்கு உள்ளது.
இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் பயணம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
இந்த மலை ரயிலை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசின் பசுமை ரயில்கள் திட்டத்தின் கீழ், நீலகிரி மலை ரயிலை, ஹைட்ரஜன் எரிபொருளுக்கு மாற்றி இயக்க திட்டமிடப்பட்டு இதற்காக 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊட்டி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.