தமிழ்நாடு

tamil nadu

குத்துச்சண்டையில் பல பதக்கங்கள் வென்ற மாணவர்: சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அரசு உதவ கோரிக்கை!

By

Published : Feb 6, 2021, 11:58 AM IST

நீலகிரி: குன்னுார் அருகே 12 வயது பள்ளி மாணவன் மாநில, தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று, பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதனால், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

குத்துச்சண்டை மாணவர்
குத்துச்சண்டை மாணவர்

நீலகிரி மாவட்டத்தில் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகள் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், குத்துச்சண்டை விளையாட்டில் பெரும்பாலானோர் ஆர்வம் காண்பிக்கவில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகாலமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள கிராமங்களிலிருந்து சிறுவர், சிறுமிகள் பலர் மாநில, தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துவருகின்றனர்.

குன்னூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் சாஸ்வத் (12). நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளியின் மகனான இவர் குன்னூரிலுள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்றுவருகிறார். தனது 8 வயதில் பெட்டட்டி பகுதியில் குத்துச்சண்டை பயிற்சியாளர் அப்பாஸ் என்பவரிடம் இலவசமாக குத்துச்சண்டை பயின்றுள்ளார். மேலும், பயிற்சியாளர் அப்பாஸ் அந்த கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கு இலவசமாக குத்துச்சண்டை பயிற்சியளித்துவருகிறார்.

சிறுவன் சாஸ்வத் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சிபெறுவதைக் கண்ட பயிற்சியாளர் சிறுவனை பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளிலும் பங்கேற்கச் செய்துள்ளார். இதன் பயனாக மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டு தங்கப்பதக்கம், மாநில அளவில் 3 தங்கப்பதக்கம், மண்டல அளவில் 3 தங்கப்பதக்கம், மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் ஒரு தங்கப்பதக்கம், பஞ்சாபில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் எனப் பல பதக்கங்களையும், சான்றிதழ்களையும், பரிசுக் கோப்பைகளையும் வாரி குவித்துள்ளார்.

குத்துச்சண்டை மாணவர்

இதுமட்டுமின்றி தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றதையடுத்து தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் நடைபெறவிருந்த குத்துச்சண்டை போட்டிக்கும் தகுதிபெற்றார். ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அந்தப் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் விளையாட்டுப் பயிற்சிக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுமென மாணவன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதையும் படிங்க: வேவ் போர்டு ஓட்டியபடியே ஜக்ளிங் செய்து கோவை மாணவர் சாதனை!

ABOUT THE AUTHOR

...view details