"ஆனை தான் தெரியும், ஆஸ்கரெல்லாம் தெரியாது" முதுமலை பெள்ளியின் வெள்ளந்திப் பேச்சு! முதுமலை:முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு ஒன்றுக்கான ஆஸ்கரை இரு பெண்கள் பெற்றுத் தந்துள்ளதை விடவும், சிறந்த காலைப்பொழுது இருந்து விட முடியாது என பெருமிதம் பொங்க ட்வீட் செய்துள்ளார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இரண்டு யானைக் குட்டிகளும் அவற்றின் பராமரிப்பாளர்களுக்குமிடையிலான பாசப்போராட்டம் தான் எலிபண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம். தாய் தந்தையை இழந்த நிலையில் வனத்துறையிடம் அடைக்கலம் புகுந்தன இரண்டு குட்டி யானைகள். பெரிய யானைகளை பழக்குவது போன்று குட்டி யானைகளை அவ்வளவு எளிதில் பழக்கிவிட முடியாது என்று கூறும் வனத்துறையினர், உருவத்தில் பெரிதாக இருந்தாலும் சிறு குழந்தைக்கே உரிய சுட்டித்தனமும், பாசத்திற்கு ஏங்கும் பண்பும் யானை குட்டிகளிடத்திலும் உண்டு என்கின்றனர்.
இதனால் தான் தாயைப் பிரிந்த இரு குட்டி யானைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்புக்கு பெண் ஒருவரை தேர்ந்தெடுத்தது. கணவரை புலியின் தாக்குதலுக்கு பறி கொடுத்த பெண்ணான பெள்ளி, யானைகளுக்கு தத்துத் தாயானார். முதலில் சத்திய மங்கலம் வனப்பகுதியிலிருந்து வந்த ரகுவுக்கு தாயாக மாறி, வளர்த்தெடுத்தார். ரகுவும் ஒரு சிறு குழந்தை போல அவரைச் சுற்றி சுற்றி வந்தது. இந்நிலையில் பொம்மி என்ற பெண் யானை குட்டியும், பெள்ளியிடம் அடைக்கலம் புகுந்தது.
மனைவியை இழந்தவரான பொம்மனும் யானைகளை வளர்த்தெடுக்கும் பணியில் இணைய, யானை குட்டிகளே தங்கள் தாய் தந்தையை தேர்ந்தேடுத்தன. யானைகளுக்காக வாழும் இருவரும், யானைகளால் இணையும் வாழ்வைப் பேசும் படம் தான் Elephant Whisperers ஆவணப்படம்.
இந்த ஆவணப்படம் ஆஸ்கர் வென்றுள்ளது குறித்து முதுமலை முகாமில் வசிக்கும் பெள்ளி ஈடிவி பாரத் நிருபரிடம் பேசினார். விருதின் கனம் ஏதுமறியாத வெள்ளந்திச் சிரிப்புடம் நம்மை எதிர் கொண்டார் பெள்ளி. ரகு யானைக்குட்டியை முதலில் பார்த்த போது, அதன் வால் துண்டிக்கப்பட்டு பரிதாபமான நிலையில் இருந்தது என்றும், கணவர் பொம்மனின் ஆதரவால் குழந்தை போல அதனை காப்பாற்றியதாக நினைவு கூர்கிறார் பெள்ளி. இதன் பிறகு பொம்மியையும் பாலூட்டி காப்பாற்றியதாக கூறுகிறார்.
தாயை இழந்த யானைக்குட்டிகளை , தனது சொந்த குழந்தையாக கருதி வளர்த்ததாக கூறுகிறார் பெள்ளி, பழங்குடி மாவூத் குடும்பத்தைச் சேர்ந்தவரான பெள்ளி, தனது முன்னோர்களும் இதே தொழிலை செய்வதால் இது தனது ரத்தத்திலேயே இருப்பதாக கூறுகிறார். ஆஸ்கர் விருது குறித்து ஏதும் தனக்கு தெரியாது என்றும் வெள்ளந்தியாக கூறுகிறார் பெள்ளி.
அரசிடம் உத்தரவு வாங்கி ஆவணப்படம் எடுக்க கார்த்திகி தங்களை அணுகியதாகவும். யானைகளுடன் தாங்கள் எப்போதும் எப்படி பழகுவது, குளிப்பாட்டுவது உள்ளிட்டவற்றை படம் எடுத்து போனது மட்டும்தான் தனக்கு தெரியும் என கூறுகிறார். ஆனாலும் தற்போது வாழ்த்து மழையில் நனையும் பெள்ளி தனக்கு மட்டுமின்றி , முதுமலை முகாமுக்கே பெருமிதம் தான் என கூறுகிறார்.
இப்போதும் கூட பெள்ளியின் கணவர் பாதிக்கப்பட்ட யானை ஒன்றை மீட்டு கொண்டு வருவதற்காகத்தான் சேலம் சென்றிருக்கிறார். என்னதான் யானைகளை வளர்த்தெடுத்தாலும், ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன், பெள்ளி , பொம்மன் தம்பதியிடமிருந்து யானைகள் பிரித்து கொண்டு செல்லப்படுகின்றன. இதனை மனதளவில் தாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் தன்னைத் தேடி வரும் அடுத்த பெரிய குழந்தைக்காக ஆவலுடன் வாசலிலேயே காத்திருக்கிறார் பெள்ளி.