நீலகிரி:முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு, அபயாரண்யம் யானை முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. கரோனா தொற்றுப் பரவல் உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று ஆண்டு காலமாக விநாயகர் சதுர்த்தி விழா, இதர விழாக்கள் முதுமலை புலிகள் காப்பகத்தில் கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வனத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று (செப். 10) அனைத்து யானைகளும் மாயாற்றில் குளிக்கவைக்கப்பட்டன.
அலங்கரிக்கப்பட்ட யானைகள்
பின்னர், அனைத்து யானைகளும் குங்குமம், சந்தனம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு, தெப்பக்காடு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு நீண்ட வரிசையில் நிற்கவைக்கப்பட்டன.
முதுமலை யானைகளின் விநாயகர் வழிபாடு குறிப்பாக, ஸ்ரீரங்கம் கோயிலில் பாகனை கொன்ற மசினி என்று பெயரிடப்பட்ட யானையும், கிருஷ்ணா என்ற யானையும் தெப்பக்காடு முகாமில் உள்ள விநாயகர் கோயிலுக்கு நேற்று மாலை 6 மணிக்கு அழைத்துவரப்பட்டன.
தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி
அப்போது அங்கிருந்து கோயில் அர்ச்சகர் பூஜை செய்துவந்த நிலையில், இந்த இரு யானைகளும் தும்பிக்கையில் மணி அடித்தவாறு மூன்று முறை கோயிலைச் சுற்றிவந்தன. பின்னர், கோயிலின் இருபக்கமும் நின்ற இரு யானைகளும் பின்னங்கால்களில் மண்டியிட்டு முன்னங்காலைத் தூக்கி விநாயகரை வணங்கின.
அதன் பின்னர், அனைத்து யானைகளையும் தெப்பக்காடு யானைகள் உணவு வழங்கும் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டன. பின்னர் யானைகளுக்குத் தயார்செய்யப்பட்ட பொங்கல், கரும்பு, தாது உப்பு, மாதுளை பழம், வாழைப்பழம் கரும்பு, வெல்லம், ராகி உள்பட ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன.
யானைகள் விநாயகருக்கு பூஜை செய்ததை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் கண்டுகளித்தனர். மேலும், கேரளாவில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள நிலையில் தமிழ்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையை காண குவிந்த பக்தர்கள்