கூடலூரை அடுத்த நந்தட்டி இந்திராநகர் பகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படும் வாகனம் ஒன்றினை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்திரா நகர் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக வெளியூர் நபர் ஒருவருக்குச் சொந்தமான வாகன நடமாட்டத்தை திமுகவினர் கண்காணித்து வந்துள்ளனர். இந்த வாகனத்தில் இருந்து வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதை உறுதி செய்த திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலான திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அங்குத் தேர்தல் அலுவலர்கள் வந்தபோது வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். வாகனத்தின் ஓட்டுநர் உடன் காரை காவல்நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்து வந்தபோது, காரை நடுவழியில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். இதன்பிறகு வேறு ஓட்டுநர் மூலம் கூடலூர் காவல் நிலையத்திற்கு வாகனம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டது.