நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்ரவரி. 27) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.
இந்நிலையில் குன்னூர் அருகேயுள்ள எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் இம்முகாமினை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 'மாவட்ட மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணி நிமித்தமாக இடம்பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
777 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட 40 ஆயிரத்து 890 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இப்பணிகளில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கத்தினர் உட்பட 3 ஆயிரத்து 203 பேர் ஈடுபடுகின்றனர்.