நீலகிரி:தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது. வடமாநில தொழிலாளர்கள் மத்தியிலும், பீகார் மாநிலத்திலும் இந்த வதந்தியால் பதற்றமான சுழல் உருவானது. வதந்தி பரப்பியவர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்தனர். மேலும் அமைச்சர்களும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் நிறுவனங்களில் ஆய்வு செய்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தனர்.
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (மார்ச்.6) இரவு ஊட்டி சென்றார். பின்னர் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார்.
முன்னதாக அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழக அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி, இங்கு திறக்கப்பட்டு 2 ஆண்டுகளாக மருத்துவ மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மருத்துவக் கல்லூரிக்காக தொடர்ச்சியாக கட்டடங்கள் கட்டுவதற்காக ஒப்பந்ததாரர்கள் மூலம் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 185 பேர் உள்பட 950 வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வாரத்திற்கு 2 முட்டைகள் அடங்கிய சத்தான உணவு வழங்கப்பட்டு வருகிறது. 2 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. உதகையின் காலநிலையை கருத்தில் கொண்டு தனி அறை அமைக்கப்பட்டு ஹீட்டர் மற்றும் கம்பளி ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.