"நாளைக்கு வெளியூருக்கு கிளம்ப தயாரா இரு" என அதிகாரியை எச்சரித்த அமைச்சர்! நீலகிரி:முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைக் கட்சியில் இணைக்கும் இலக்கை திமுக அறிவித்திருக்கிறது. கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் புதிய உறுப்பினர்களை இணைத்து இந்த இலக்கைத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, உதகையில் திமுகவின் உறுப்பினர் சேர்க்கையானது ஏடிசி பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் கழகப் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய மூன்று அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்று பேசி கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிறிது நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. அப்போது கட்சி நிர்வாகிகள் இடையே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மின்வாரிய அலுவலகத்திற்கு போனில் தொடர்பு கொண்டு என்ன காரணம் என கேட்கச் சொன்னார்.
இதையும் படிங்க: அதிநவீன வசதியுடன் கூடிய உதகை அரசு மருத்துவமனை திறப்பு எப்போது? - அமைச்சர் மா.சு. கூறிய தகவல்!
பின்னர் கட்சிகாரரிடம் இருந்து செல்போனை வாங்கிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் உதகை நகர மின்வாரிய கூடுதல் பொறியாளரை தொடர்புக்கொண்டு "மூன்று அமைச்சர்கள் பங்கேற்று இருக்கும் நிகழ்ச்சியில் இரண்டு முறை கரண்ட் கட் ஆனால் என்ன அர்த்தம். நாளைக்கு வெளியூருக்கு கிளம்ப தயாரா இரு" என எச்சரிக்கும் தொனியில் பேசிவிட்டு செல்போன் அழைப்பை துண்டித்தார். பின்னர் சிறிது நேரத்தில் விழா மேடைக்கு மின் இணைப்பானது வழங்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவரது சொந்த தொகுதியான வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரு பள்ளி விழாவில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான பிறகு சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி மின் பொறியாளர்கள் இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை எற்படும் என முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு விமர்சித்திருந்த நிலையில், நீலகிரியில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பவர் கட் ஏற்பட்ட நிகழ்வும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், மின்வாரிய அதிகாரியை மிரட்டும் தொனியில் பேசியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆடு உறவு, குட்டி பகை.. ஈபிஎஸ் Vs அண்ணாமலை மோதல்.. 9 தொகுதிகளை குறிவைக்கும் பாஜக.. அடுத்தது என்ன?