நீலகிரி: கூடலூர் அருகேயுள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவரும், எம்பிஏ பட்டதாரியுமான நிஜாஸ், பிதர்காட்டிலுள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் வியாபார கடன் கேட்டு கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்துள்ளார். வங்கி அலுவலர்களும் 17 வகையான ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்லியிருக்கிறார்கள்.
அரசால் வழங்கப்படும் மாவட்ட தொழில் மையம் சார்பாக விண்ணப்பங்கள், சமர்ப்பிக்கப்பட்டு அந்த நிர்வாகம் சார்பாக 1.5 லட்சம் மானியத்துடன் ரூ. 5 லட்சம் கடன் வழங்க அனுமதிக் கடிதமும் அளிக்கப்பட்டது. ஆனால், வங்கியில் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ள நிஜாஸ் தொடர்ந்து வங்கிக்குச் சென்று கடன் வழங்குமாறு கேட்டுள்ளார்.
வங்கி முன்பு கண்ணில் கருப்புத் துணிகட்டி இளைஞர் போராட்டம் பட்டதாரி இளைஞர்களுக்கு ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் 15 நாட்களில் கடன் வழங்கவேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனை இருக்கும்போது, கடந்த நான்கு மாதங்களாக அவருக்கு கடன் வழங்காமல் வங்கி அலுவலர்கள் அலைக்கழித்துள்ளனர். இன்று மீண்டும் வங்கி அலுவலர்கள் அவருக்கு கடன் வழங்காமல் அலட்சியம் காட்ட, வங்கி முன்பாக கண்ணில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து பேசிய நிஜாஸ், "கடந்த நான்கு மாதங்களாக வங்கிக்கடனுக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறேன். தொடர்ச்சியாக வங்கி அலுவலர்கள் என்னை அலைக்கழிக்கிறார்கள். கடன் பெறுவதற்கான அனைத்து தகுதிகள் இருந்தும் ஏன் அலைக்கழிக்கிறார்கள் என தெரியவில்லை" என்று வேதனையோடு கூறினார். பிதர்காடு வங்கியில் கடன்கேட்டு வரும் பல இளைஞர்களுக்கு கடன் வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு : நீலகிரியில் புதிய கோவிட் கேர் இணையதளம் தொடக்கம்