நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில், தங்கும் விடுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த காட்டு யானையை விரட்ட, விடுதி உரிமையாளர்கள், ஊழியர்கள் எரியும் டையரை யானையின் மீது எறிந்தனர். இந்த தீ வைப்பு சம்பவ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த விடுதியின் உரிமையாளர் மல்லனின் மகன் ரேமண்ட் டீன், ஊழியர் பிரசாத் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான ரிக்கி ரயான் என்பவரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், யானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக மசினகுடியில் உண்மை கண்டறியும் குழு விசாரணை மேற்கொண்டது. மத்திய அரசின் யானைகள் பாதுகாப்பு இயக்ககம் (பிராஜெக்ட் எலிஃபேண்ட்) இணை இயக்குநர் மூத்த விஞ்ஞானி முத்துதமிழ் செல்வன் சம்பவம் நடந்த மாவனல்லா பகுதியை ஆய்வு செய்தார். பின்னர் மசினகுடி பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.