நீலகிரி:கேரளா மாநிலம் கண்ணூர் கறிக்கோட்டக்கர பகுதியில் நேற்று(நவ.13) மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் காவல்துறைக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாவோயிஸ்டுகள் தாக்கப்பட்டதாகவும், சிலர் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வரை மாவோயிஸ்டுகள் யாரும் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதிகளில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின்படி 50க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு காவல் துறையினர் ஆயுதம் ஏந்தியவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் வனப்பகுதிகளில் சமீப காலமாக மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்களை பிடிப்பதற்காக தண்டர்போல்ட் காவல்துறை, சிறப்பு காவல்துறை மற்றும் கேரளா போலிசார் களமிறங்கி இருந்த நிலையில் தற்போது தமிழக காவல்துறையினரும் இணைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல் வராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிர படுத்தியுள்ள காவல்துறையினர். சோதனைச்சாவடிகள் அமைத்து கண்கானித்து வருகின்றனர்.