நீலகிரி : உதகை அரசு மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிக்கல் செல் அனீமியா ஸ்கிரீனிங் ப்ரோக்ராம் சென்டரை தமிழக சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற இரத்த தான முகாமினை துவக்கி வைத்தும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர்களுடன் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உதகையில் 600 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதிக்குள் மருத்துவமனை திறக்கப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்து 21 காலி மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கும், ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.