கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து 172 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டனர். இதனால் மே மாதத்தில் நடைபெறயிருந்த மலர் கண்காட்சியும் ரத்து செய்யபட்டது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. சுற்றுலாவை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த மாதம் முதல் தோட்டகலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா போன்றவைத் திறக்கப்பட்டன.
அன்று முதல் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இ-பாஸ் விண்ணப்பிக்கும் போது ’சுற்றுலா’ என தனியாக விண்ணப்பித்து வரலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.