நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்குப்பெட்டிகள் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்தது. இந்த சூழலில், வாக்கு எண்ணும் மையம் அருகே பத்திற்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள், அலுவலர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அதிரடி படை, காவல் துறையினர், போக்குவரத்து காவல் துறையினர் இணைந்து காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஓன்றியத்தில் பதிவான வாக்குகள் சூலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டு வருகிறன. இதில் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பதுவம்பள்ளி ஊராட்சி வாக்குப்பெட்டியில் முத்திரையிடப்பட்ட சாக்கு இல்லாததால், அந்த பெட்டியின் வாக்குகளை எண்ண முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு எண்ணிக்கையை நடத்த விடாமல் முகவர்கள் வாக்குவாதம் செய்தனர்.