நீலகிரி:கூடலூர் அருகே உள்ளபந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களை தாக்கி வருவதும் அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 பெண்களை சிறுத்தை தாக்கியது. இதில், படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதை தொடர்ந்து, மேங்கோ ரேஞ்ச் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் வீடு திரும்பிய ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நான்சி (வயது 3) என்ற சிறுமியை, தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் தேயிலை தோட்டம் முழுவதும் சிறுமியை தேடினர்.
பின்னர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுத்தையின் தாக்குதல் காரணமாக ஏற்கனவே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், இன்று இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால், சிறுத்தையை சுட்டுப் பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று இரவு (ஜனவரி 7) சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், கூடலூர் பகுதியில் முழு கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.