நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டிய லேம்ஸ்ராக் காட்சிமுனை, சுற்றுலாப் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இந்த பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிகள் வழியாக சென்று அங்குள்ள காட்சிமுனையை கண்டுகளித்து வருகின்றனர்.
பர்லியார் ஊராட்சி சார்பில் இங்கு சுற்றுலா வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இப்பகுதியில், ஆய்வு செய்த வனத்துறை உயர் அலுவலர்கள், காப்பு வனப்பகுதியான இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் காட்சி முனைக்கு தடை விதிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வியாபாாிகள், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, வனத்துறையினா் தடையை நீக்கி சுற்றுலாப் பயணிகளையும், வாகனங்களையும் அனுமதித்தனா்.