நீலகிரி:கிராமப்புறங்களில் உள்ள தலைசிறந்த விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிக்கின்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
உதகை அருகே உள்ள பரலட்டி கிராமத்தில் நேதாஜி விளையாட்டு சங்கம் சார்பில் கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பரிசுக் கோப்பைகளை வழங்கினார். அதன் பின்பு உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் எல் முருகன், கேலோ இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தியதன் காரணமாக கிராமங்கள் மற்றும் மாவட்டங்கள் தோறும் உள்ள வீரர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதே போன்று ஃபிட் இந்தியா (Fit India) திட்டம், அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார். மேலும், யோகா கலை நமது நாட்டில் தொடங்கிய கலை என்றும், தற்போது யோகா கலையை உலகெங்கும் எடுத்துச் சென்று அதற்கு அங்கீகாரம் பெற வைத்தது பிரதமர் மோடி என்று அவர் குறிப்பிட்டார். கேலோ இந்தியா (Khelo India) திட்டம் காரணமாக ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.