நீலகிாி மாவட்டம், கோத்தகிாி அருகே உள்ள உயிலட்டி கிராமத்தில் நேற்று (பிப். 16) புலி சத்தமிட்டது. கிராம மக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அங்கு புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி போராடியது. பின்னர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிகழ்விடம் சென்ற வனத் துறையினர், புலிக்கு மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதியில் விட முடிவெடுத்தனர். இதற்காக கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால், மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியை கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டதால் புலியை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனிடையே புலியை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
புலியைப் பிடிக்க முயலும் வனக்காவலர்கள் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கி வந்தடைவதற்குள் சுருக்கு கம்பியை இழுத்துக்கொண்டவாரே புலி புதருக்குள் நகா்ந்தது. பின்னர், வேட்டை தடுப்பு காவலர்கள் மரத்தின் மேல் ஏறி புலி மீது கல்லெறிந்து விரட்ட முயன்றனர். காலை முதல் மாலை வரை போராடி புலியை வனத்துறையினரால் விரட்ட முடியவில்லை. இந்த நவீன காலத்தில் கற்களை கொண்டு புலியை விரட்ட நினைத்த வனத்துறையினா் மீது அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
பின்னா், புலி இரவுக்குள் சென்றுவிடும் எனக்கூறி வனக் காவலர்கள் பொதுமக்களை அப்புறப்படுத்தினர். வனத்துறையினரின் மெத்தனப்போக்கே புலியைப் பிடிக்க முடியாமல் போனதாக குற்றம்சாட்டிய பொதுமக்கள், புலியை அங்கிருந்து நிரந்தரமாக விரட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : சிஏஏ போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்!