நீலகிரி:கோத்தகிரி அருகே கப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் திடீரென நேற்று (பிப்ரவரி 27) இரவு 10 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக கோத்தகிரி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில் தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியாததால் பின்பு குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்பு நிலைய வாகனங்கள் வரவைக்கப்பட்டன.
மேலும் தேயிலை தூள் இருந்ததால் தீ மளமளவெனப் பரவி உள்ளது. தீயணைப்புத் துறையினர் 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். மேலும் தீயணைக்க அதிக அளவில் நீர் பற்றாக்குறை இருந்த நிலையில் நீர் வேண்டி கோத்தகிரி பேரூராட்சி அருகில் உள்ள தொழிற்சாலையின் பின்பு உள்ள பகுதியில் நீர் எடுத்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசமானதாகத் தெரிகிறது. மேலும் இந்தத் தீ விபத்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: காரை பின்னோக்கி இயக்கியபோது விபரீதம்: 4 வயது குழந்தை உயிரிழப்பு