நீலகிரி:Kodanadu murder case:கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து, அங்கு பணியில் இருந்த காவலாளியை கொலை செய்துவிட்டு பங்களாவில் இருந்த பொருள்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இவ்வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், கடந்த நான்கு ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.
இவ்வழக்கின் கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு தரப்பு சாட்சிகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விசாரணை
இவ்வழக்கின் திடீர் திருப்பமாக, கடந்த அக்டோபர் 25ஆம் தேதி சேலம் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.
இவர்கள் மீது சாட்சிகளை கலைத்தல், சாட்சிகளை அழித்தல், தடயங்களை அளித்தல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கூடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (டிச.23) உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அரசு வழக்கறிஞர் கனகராஜ், ஷாஜகான் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 10 பேரில், சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.