கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 5ஆம் சாட்சியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொலை மற்றும் கொள்ளை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை அடையாளம் காட்டினார். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் சிறையில் உள்ள நிலையில், மற்ற 8 பேர் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
‘கோடநாடு வழக்கு விசாரணை மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு’ - சயான்
நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணையை வரும் மார்ச் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29ஆம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. 2ஆம் சாட்சியான பஞ்சம் விஸ்வகர்மா மற்றும் 3ஆம் சாட்சி சுனில் தாபா ஆகியோர் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். முக்கிய சாட்சி கிருஷ்ண தாபா கடந்த 10ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
மேலும், சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, உதயன் ஆகிய 5 பேரை அடையாளம் காண்பித்தார். இந்நிலையில், நேற்று மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் ஆஜராகினர். நேற்று 5 மற்றும் 6ஆம் சாட்சிகளான கோடநாடு எஸ்டேட் கள அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன் விசாரணைக்கு ஆஜராகினர். இதில், 5ஆம் சாட்சியான ராதாகிருஷ்ணனிடம் அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் விசாரணை நடத்தினார். கொலை மற்றும் கொள்ளை நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட சுமார் 40 பொருட்களை ராதாகிருஷ்ணன் அடையாளம் காட்டினார். குற்றம்சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் ஆனந்த், ராதாகிருஷ்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். ராதாகிருஷ்ணனின் வாக்குமூலத்தை நீதிபதி பி.வடமலை பதிவு செய்துக்கொண்டார். பின்னர் வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.