நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்லக்கூடிய பேருந்து நிறுத்தம் பகுதியில், கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லக்கூடிய அரசு பேருந்தின் முகப்பு கண்ணாடியை மதுபோதையில் உடைத்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதுபோதையில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் மதுபோதையில் இருந்த நபரின் பெயர் வின்செண்ட் என தெரியவந்தது. இவர் கோத்தகிரி குப்பட்டிக்கம்பை பகுதியை சேர்ந்தவர். இந்த நபர் மதுபோதையில் தன் மனைவி குழந்தையுடன் குன்னூர் அருகே உள்ள வண்டிச் சோலை பகுதிக்கு செல்ல நீண்ட நேரம் பேருந்தில் காத்து இருந்தார். பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் பேருந்தில் நீண்ட நேரமாக இல்லாததால் போதை தலைக்கேறி சாலையில் இருந்த கல்லை எடுத்து அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தார் என்பது தெரியவந்தது.