உலகளவில் சர்வதேச புலிகள் தினம் ஆண்டு தோறும் ஜுலை 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அழியும் நிலையில் உள்ள புலி இனங்களைக் காப்பாற்ற, பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, கடந்த 1973ஆம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. புலிகளை அழிவின் பிடியிலிருந்து மீட்க 2010ஆம் ஆண்டு ரஷ்யா, இந்தியா உட்பட 13 நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டது.
புலிகள் கணக்கெடுப்பு
வளமான காடுகளை உருவாக்கும் புலிகளை காப்போம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்படும். அதன்படி இந்திய நாட்டின் தேசிய விலங்காக உள்ள புலி 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1700 ஆக இருந்தது. அக்கால கட்டத்தில் ஆயிரணக்கான புலிகள் வேட்டையாடப்பட்டதால், புலியைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து பல வன பகுதிகளைப் புலிகள் சரணாலயமாக அறிவித்தது. அதன் விளைவாக கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் எடுத்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 2,967-ஐ அடைந்தது.
புலிகளின் வகைகள் மற்றும் சரணாலயங்கள்
உலகளவில் சைபீரியன் புலிகள், பெங்கால் புலிகள், தென் சீன புலிகள், ஜாவா புலிகள், சுமத்திரா புலிகள், மலாயன் புலிகள், இந்தோனேசியப் புலிகள், பாலி புலிகள், காஸ்பியன் புலிகள் என 9 வகை புலிகள் காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாக்க களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக சரணாலயம் என 4 சரணாலயங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழகத்திலுள்ள புலிகளைக் காப்பாற்ற சிறப்பு நிதிகளை ஒதுக்கி வன பகுதிகளில் குடிநீர் குளங்கள் அமைத்ததால், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகத்தில் 162 புலிகளும், மற்ற மூன்று புலிகள் காப்பகத்தில் 192 புலிகளும் இருக்கின்றன. இதுதவிர நீலகிரி மாவட்டத்திலுள்ள 60 விழுக்காடு வனப்பகுதிகளில், 250க்கும் அதிகமான புலிகள் உள்ளன.
வளமான காடு மற்றும் வற்றாத ஆறுகள் உருவாகக் காரணமாக இருப்பதே புலிகள்தான். அதனால் காடுகளை ஆக்கிரமித்தல், காடுகளை ஒட்டி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளாமல் தடுத்து காடுகளைப் பாதுகாத்து, அழியும் பட்டியலில் உள்ள நமது தேசிய விலங்கான புலியை பாதுகாக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்போம். பொது மக்களிடையே இதுகுறித்து இந்நாளில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
இதையும் படிங்க:இது எங்க ஏரியா - வாகன ஓட்டிகளிடம் கம்பீரம் காட்டிய சிறுத்தை!