நீலகிரி மாவட்டத்தில் ஒன்பது பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். அதில் நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பினர், மற்ற ஐந்து பேரும் இந்த வாரம் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
இதையடுத்து, புதிதாக கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதனால் கர்நாடகா, கேரளாவிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களையும், அவற்றை இயக்கும் ஓட்டுநர்கள், அவர்களின் உதவியாளர்களையும் தீவிரமாகச் சோதனை செய்கின்றனர்.