கோவை: கோவையில் சில வருடங்களுக்கு முன்னர் விநாயகம் என்ற ஆண் காட்டு யானை விளைநிலங்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனையடுத்து விநாயகம் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது.
அவ்வப்போது அங்கிருந்து வெளியேறும் விநாயகம் யானை, கூடலூர் அருகே உள்ள ஓடக்கொல்லி, புத்தூர் வயல், தொரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து நாசம் செய்தது. தொடர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த விளைநிலங்களையும் விநாயகம் யானை சேதப்படுத்தியது.
அட்டகாசம் செய்யும் யானை தொடர்பான காணொலி கண்காணிப்பை தீவிரப்படுத்திய வனத்துறை
இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.23) மரவள்ளி தோட்டத்திற்குள் புகுந்த விநாயகம் யானை பயிர்களை நாசம் செய்தது. இதனைத் தொடர்ந்து யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க காலர் ஐடி பொருத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதுவரை விநாயகம் யானை கிராமங்களுக்கு வருவதைத் தடுக்க 24 மணி நேர தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, விநாயகம் யானை கிராமத்துக்குள் வராமல் தடுக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தந்தங்களுக்காக கொல்லப்பட்ட யானை?