நீலகிரி மாவட்டம் கொலக்கம்பை அருகே கிரேக்மோர் தனியார் எஸ்டேட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் இங்கு கடந்த 6ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி அசோக் பகத் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அசோக் பகத்தின் வீட்டின் அருகிலுள்ள மற்றொரு ஜார்கண்ட் தொழிலாளி ஒருவரின் எட்டு வயது மகள் கடந்த மாதம் 21ஆம் தேதி காணாமல்போனார். இது தொடர்பாக கடந்த 17 நாள்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில் இந்தக் கொலை சம்பவம் நடந்தது. கொலை நடந்த வீட்டில் 9 பேரின் பெயர் எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதம் சிக்கியது. இது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
நீலகிரி எஸ்டேட் விவகாரம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை இந்நிலையில் இறந்த குடும்பம் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், தேசிய பட்டியலினப் பிரிவின் தலைவர் சமீர் ஓரான் என்பவரின் உத்தரவின்பேரில், மத்திய அரசின் இரும்புத் துறை இயக்குநரும், மாநில பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலினப் பிரிவு பார்வையாளருமான ராமசாமி தலைமையில், பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து கொலை நடந்த வீட்டின் அருகே ஆய்வுசெய்து அருகில் உள்ள ஜார்கண்ட் மாநிலத் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கையை தேசிய பட்டியலினப் பிரிவு தலைவரிடம் சமர்ப்பித்து மத்திய அரசுக்குச் சமர்ப்பிக்க உள்ளனர்.
இது தொடர்பாக பாஜக பட்டியலினப் பிரிவு பார்வையாளர் ராமசாமி செய்தியாளர்களிடம கூறுகையில், "இந்தக் கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும். மேலும் காணாமல்போன குழந்தையையும் கண்டுபிடிக்க வேண்டும். இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த பரிந்துரைக்கப்படும்" என்றார்.