நீலகிரி: உதகமண்டலம் அருகேவுள்ள மாவனல்லா உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்து வந்தது. இந்த யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சுமார் அரை அடிக்கு அதன் தும்பிக்கை துண்டாகியது.
யானையை காட்டுக்குள் விடக்கோரி மனு
முன்னதாக அதன் காயங்கள் குணமான நிலையிலும் மற்ற யானைகளைப் போல தனது தும்பிக்கையை பயன்படுத்தி உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்த யானை தொடர்ந்து குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் அந்த யானையை பிடிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த மே மாதம் யானை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இந்நிலையில், 50 நாள்களுக்கு மேலாக மரக்கூண்டில் உள்ள ரிவால்டோ யானையை மீண்டும் வனப் பகுதியில் விட வேண்டும் என விலங்குகள் உரிமை ஆதரவாளர் மேனகா காந்தி தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.