நீலகிரி:வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மற்றும் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் குன்னூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குன்னூரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது செங்கல்கொம்பை என்ற பழங்குடியின கிராமம். இந்த கிராமத்திற்குச் செல்லக்கூடிய சாலை இடி விழுந்ததால் தனித் தீவு போல் கிராமம் மாறியது.
இந்நிலையில், செங்கல்கொம்பை பகுதியில் வாழும் 14 குடும்பத்தினரை குன்னூர் வட்டாட்சியர் கனிசுந்தரம், வருவாய் துறையினர் மற்றும் குன்னூர் வனத்துறையினர், பேரிடர் மீட்பு குழுவினர் ஆகியோர் அப்பகுதிக்கு மீட்க சென்றனர். பழங்குடியினர்கள் அப்பகுதியை விட்டு வர மறுத்ததால் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு முதற்கட்டமாக ஆறு நபர்களை மட்டும் மீட்டு உலிக்கல் செங்கல்புதூர் பகுதியில் உள்ள முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.