நீலகிரி:உதகையில் புதிதாக தொடங்கபட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள 149 மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று (ஏப். 18) நடைபெற்றது.
அதில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கிகளை வழங்கினர்.
மருத்துவ மாணவர்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பின், விழாவில் பேசிய மா.சுப்ரமணியன், "உதகையில் அரசு மருத்துவக்கல்லூரி ரூ. 461 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மலை மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரி கொண்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி பெற்றுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன், "தமிழ்நாட்டில் உள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,650 மருத்துவ மாணவர் இடங்கள் உள்ளது. அதில் இந்த ஆண்டிற்கான சேர்க்கையில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற 1,450 இடங்கள் நிரப்பிவிட்டன.
அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பு மேலும், மத்திய அரசு கோட்டாவில் உள்ள 24 இடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசம் கடந்த ஏப். 11ஆம் தேதியுடன் முடிந்துவிட்டதால் அந்த இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இடங்களை நிரப்ப தமிழ்நாடு சுகாதாரத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மருத்துவம் மற்றும் தொழில் சார்ந்த கல்விகளில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள 534 மாணவர்கள் கல்வி கற்க தமிழ்நாடு அரசு, புத்தகத்திற்கு பதிலாக விரைவில் நவீன வசதி கொண்ட டேப்லட்கள் வழங்கபடும். நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் விரைவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி