நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மோசமாக இருந்ததால் இதனை ரூ. 1 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி செய்து முடிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த சாலையை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று திறந்து வைத்து, காட்சிமுனைக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அவர் ரூ.23 கோடியே 50லட்சம் மதிப்பிலான இலவச மடிக்கணினிகள், மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவ கல்லூரி தொடங்குவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி கவனத்திற்கு கொண்டு செல்லபடும் என்றார். மேலும் 2009ஆம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டு ஏக்கர்களில் வீடுகள் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. அதேபோல இந்தாண்டு மழையால் வீடுகள் இழந்த மக்களுக்கும் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த பட்டியலை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும், தேர்தலை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி