நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகில் உள்ள மணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு மற்றும் அவரது மனைவி பிரேமா இருவரும், அவர்களுக்குச் சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தில் பயிர் செய்து வந்தனர். இந்த தோட்டத்திற்கு அருகே இருந்த ராஜுவின் சகோதரருக்கு சொந்தமான தோட்டத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், ராஜுவின் தோட்டத்தையும் வாங்குவதற்காக கேட்டுள்ளார்.
அந்த இடத்தில் தேயிலை தொழிற்சாலை கட்டப்போவதாகக் கூறி நிலத்தை கேட்டுள்ளார். ஆனால், விலை குறைவாக இருந்ததால் ராஜு தனது தோட்டத்தை தர மறுத்துள்ளார். இதனால் புத்தி சந்திரன் ராஜுவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தோட்டப் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தோட்டத்தை தரும்படி ராஜுவை புத்தி சந்திரன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் கடந்த டிசம்பர் மாதம் ராஜுவின் சகோதரரிடம் வாங்கிய தோட்டத்தில் சாலை அமைப்பதற்காக தேயிலைச் செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ராஜுவின் நிலத்தில் இருந்த தேயிலைப் பயிர்களையும் அகற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜு, தனது தோட்டத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புத்தி சந்திரன் மீது மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி புத்தி சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக புத்தி சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.