முதுமலை புலிகள் காப்பக தள இயக்குனர் வெங்கடேஷ் நீலகிரிமாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை தன்னகத்தே கொண்டு உள்ளது. இதனால் இங்கு வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி எமரால்டு கிராம பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
இதில் மரபணு குறைபாடு கொண்ட இரண்டு வெள்ளைப் புலிகளும் உள்ளன. அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும் தொடர் கதையாகி வருவதாக கூறப்படுகிறது. நீலகிரியில் கடந்த 40 நாட்களில் மட்டும் பெரிய மற்றும் சிறிய புலிகள், குட்டிகள் என 10 புலிகள் இயற்கைக்கு மாறாக இறந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ஆய்வு செய்ய தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக முதுமலை புலிகள் காப்பக தள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். மேலும், இறந்த குட்டி புலியின் டிஎன்ஏ.வுடன் (DNA) தங்களிடம் உள்ள மற்ற புலிகளின் டிஎன்ஏ.வையும் ஒப்பிட்டு பார்த்து தாய் புலியை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஹைதராபாத், ஆனைக்கட்டி உள்ளிட்ட வன உயிரினப் பரிசோதனை கூடங்களுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் 2 மாத காலத்திற்குள் அதன் முடிவுகள் கிடைக்கப் பெற்றால் புலிகளின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும், புலிகளைக் கண்காணிக்க உதகையில் 6 இடங்களில் புதிதாக முகாம்கள் அமைக்கப்பட்டு கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புலிகள் கணக்கெடுப்பு பணிகள் இனி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்பதை மாற்றி அமைத்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உதகையில் மட்டும் 52 புலிகள் உள்ள நிலையில் இவற்றை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவைகள் முதுமலை புலிகள் கண்காணிப்பகத்துடன் தொடர்புபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எமரால்டு கிராமம், நேரு நகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணை, தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் மர்மமான முறையில் இரண்டு புலிகள் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து உயிரிழந்த நிலையில் மூன்று புலிக் குட்டிகளும், உயிருக்கு போராடிய நிலையில் ஒரு குட்டியையும் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். தற்போது உயிர் பிழைத்த குட்டி புலிக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:22 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் பிடிபட்ட பிரபல ரவுடி!