நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கோடமலை எஸ்டேட் பகுதியில் தேயிலை செடிகளின் இடையே மறைந்திருந்த சிறுத்தை தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளியை தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் மேனகா என்ற பெண் தொழிலாளிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரின் அலறல் சத்தம் கேட்டதும் அருகே இருந்த தொழிலாளர்கள் அங்கு சென்று சிறுத்தையை விரட்டியுள்ளனர். அதனைத் தொடர்ந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் மேகலா அ னுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு சிறுத்தை ஒன்று மாலை நேரத்தில் பாறை மீது அமர்ந்து செல்வது வழக்கம். இது நாள் வரை எவ்விதமான இடையூறுகள் சிறுத்தையால் ஏற்பட வில்லை. ஆனால் வன விலங்குகளை புகைப்பட கலைஞர்கள், தன்னார்வலர்கள் என கூறி 12க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் அங்கு சென்று சிறுத்தையை புகைப்படங்கள் எடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இவர்கள் தினந்தோறும் சிறுத்தையை புகைப்படங்கள் எடுப்பதாக கூறி துன்புறுத்தி வருகின்றனர். எனவே இவர்களால் சிறுத்தை தற்போது இடம் மாறி தொழிலாளர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றனர்.