உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித் திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை, கடந்த 19 ஆம் தேதி தீக்காயத்துடன் காது கிழிந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. இது தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து யானைக்கு தீக்காயம் ஏற்படுத்தியவர்களை சிங்காரா வனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே இரவு நேரத்தில் அந்த யானை சென்றதும், அப்போது சிலர் அந்த யானையின் மீது கொளுந்து விட்டு எரியும் துணியை வீசிய அதிர்ச்சி காட்சி வெளியானது.
யானைக்கு தீ வைத்த கொடூரர்கள்! - குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை!
12:18 January 23
உதகை: காட்டு யானைக்கு தீ வைத்த கொடூரர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.
இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சார்ந்த மல்லன் என்பவரது இரண்டு மகன்கள், மற்றும் அதே பகுதியை சார்ந்த பிரசாந்த் என்பது தெரிய வந்தது. அதில் மல்லனின் மூத்த மகன் ரிக்கி ராயன் (31) தப்பி ஓடிய நிலையில், ரேமண்ட் டீன் (28) மற்றும் பிரசாந்த் (36) ஆகிய இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், காட்டு யானைக்கு தீ வைத்த 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கௌசல் தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள ரிக்கி ராயனை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ பதிவை ஆராய்ந்து இதில் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். மசினகுடி பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கௌசல் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: வருவாய் துறை விசாரணையில் ஆள்மாறாட்டம் உறுதி!