நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கடந்த ஒரு மாத காலமாக குட்டியுடன் கூடிய எட்டு காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானைகளை, வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஜன.11) இரவு திடீரென இரண்டு காட்டு யானைகள் திரும்பி, வனத்துறையினரை விரட்ட ஆரம்பித்தது. இதில் வேட்டைத் தடுப்புக் காவலர் லோகேஷ்வரன் (40) படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு லோகேஸ்வரனை வனத்துறை வாகனம் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். தற்போது வேட்டைத் தடுப்புக் காவலர் லோகேஷ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.