நீலகிரி:நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இங்கு வன விலங்குகளான காட்டெருமைகள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், அடிக்கடி பொருள்சேதங்களும், உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், நேற்று (ஜன.6) பந்தலூர் அருகே, மேங்கோரேஞ்ச் எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவரது குழந்தை (3) அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, காட்டுப் பகுதியிலிருந்து வெளியே வந்த சிறுத்தை, குழந்தையைத் தாக்கி தேயிலைத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டி சிறுமியை மீட்டுள்ளனர். பின்னர், பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அக்குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்ததால், நேற்று மாலை முதல் கூடலூர் பகுதியில் சாலை மறியல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது. ஏற்கனவே, சிறுத்தையைப் பிடிக்க பத்து இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு, ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி தீவிரபடுத்தப்பட்டது.