கூடலூர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி கண்காணிப்பு! நீலகிரி:கூடலூர் அருகே உள்ளபந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து கால்நடைகளைக் கொன்று வருவதோடு மனிதர்களைத் தாக்கி வருவதும் அதிகரித்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 பெண்களைச் சிறுத்தை தாக்கியது.
இதில், படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, மேங்கோ ரேஞ்ச் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் இருந்து தனது தாயுடன் வீடு திரும்பிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நான்சி (வயது 3) என்ற சிறுமியை, தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த சிறுத்தை தாக்கி இழுத்துச் சென்றது. தாயின் அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டம் முழுவதும் சிறுமியைத் தேடினர்.
பின்னர், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி பந்தலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், சிறுத்தையைச் சுட்டுப் பிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் கூடலூர், பந்தலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் (ஜனவரி 7) சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், கூடலூர் பகுதியில் முழு கடையடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க 2 வனக் கால்நடை மருத்துவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறுத்தையைப் பிடிக்க 6 கூண்டுகள் அமைத்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதியில் இருந்த சிறுத்தையைப் பிடிக்கக் கும்கி யானை வரவழைக்கப்பட்டது. யானை மேல் அமர்ந்து வனக் கால்நடை மருத்துவர் மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து, சிறுத்தையை வலை போட்டு பிடித்து கூண்டில் அடைத்தனர். பிடிபட்ட சிறுத்தை நான்கு வயது ஆண் சிறுத்தை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் ரேஞ்ச் எஸ்டேட் பகுதியில் மீண்டும் சிறுத்தை இருப்பதாக வட மாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், தொண்டியாளம் பகுதியில் (15) இடங்களில் டிராப் கேமரா இன்று (ஜன.08) பொருத்தினர். மேலும் வன விலங்குகளின் நடமாட்டம் தீவிர கண்காணிக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
இதையும் படிங்க:கடன் தொல்லையால் விரக்தி; மகனைக் கொன்ற தந்தை தற்கொலைக்கு முயற்சி - சென்னையில் நடந்தது என்ன?