உலகம் முழுவதும் காதலர் தினம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட், பரிசு பொருள்களை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி, குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு காதலர் தினத்தன்று காதலர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். மேலும் புதிதாக திருமணமான தம்பதிகள் நீலகிரிக்கு வந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள்.
இதனால், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் காதலர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மலர்கள், கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. காதலர் தினத்தையொட்டி குன்னூரில் உள்ள மலர் விற்பனையகங்களில் ரோஜா பூக்கள், கார்னேசன், லில்லியம், புளுடைசி, ஜெர்புரா, ஆர்கிட் மலர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள பூக்கள் இந்த ஆண்டு ரோஜா பூ ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. நீலகிரியில் ரோஜா பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையும் படிங்க:காதலர்களை சென்றடையாத ரோஜாக்கள் - கவலையில் விவசாயிகள்!