நீலகிரி:நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்கள், தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் பொதுப் பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள், தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் கால் ஊன்றி வருகின்றனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டு தங்கள் சமுதாயத்திற்கு பெருமையைத் தேடிக் குவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மீரா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் இவருடைய மகளான ஜெயஸ்ரீ, தற்போது நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகி உள்ளார். இவர் தனது பள்ளிப் படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்ததைத் தொடர்ந்து, பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் (Engineering) முடித்துள்ளார்.
சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்த இவர், அதன் பின்னர் விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சியை முடித்து, தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக ஜெயஸ்ரீ தென் ஆப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்துக்கொண்டார். இவ்வாறு படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து, நினைத்த துறையில் நுழைந்திருப்பது படுகர் சமுதாயத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோளாக உள்ளது.